நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்திருந்தது. ரகானே 38 ரன்களுடனும், பந்த் 10 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இதனிடையே இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது வரிசையாக விக்கெட்டுகளை இழந்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரகானே 46 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் அதிகபட்சமாக டிம் சவுத்தீ, கைல் ஜேமிசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் 11, டாம் பிளண்டெல் 30 ரன்கள் எடுத்து இஷாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
விக்கெட் வீழ்த்திய அறிமுக வீரர் கைல் ஜேமிசனை பாராட்டும் நியூசிலாந்து வீரர்கள் அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 93 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். அப்போது ராஸ் டெய்லர் 44 ரன்களில் இஷாந்த் பந்தில் புஜாராவிடம் பிடிபட்டார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் 89, ஹென்ரி நிக்கோல்ஸ் 17 எடுத்து ஆட்டமிழந்தனர்.
மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இஷாந்த் சர்மா தொடர்ந்து போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இரண்டாம் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இறுதியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வாட்லிங் 14, கிராண்ட்ஹோம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் இஷாந்த் மூன்று, அஸ்வின், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: சச்சின் நினைவிலிருந்து நீங்காத பிரக்யான் ஓஜா ஓய்வு!