நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி டுனெடினில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து, மார்டின் கப்தில் - டிம் செய்ஃபெர்ட் இணை நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதில் செய்ஃபெர்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கப்தில் - வில்லியம்சன் இணை ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சக்சர்களுக்கு பறக்கவிட்டு அசத்தியது. அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர்.
தொடர்ந்து சிக்சர்களை பறக்கவிட்ட கப்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளையும், 8 சிக்சர்களையும் விளாசியிருந்தார். அதன்பின் களமிறங்கிய ஜிம்மி நீஷம் தனது பங்கிற்கு ஆறு சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்தடுத்து. அணியில் அதிகபட்சமாக கப்தில் 97 ரன்களையும், வில்லியம்சன் 53 ரன்களையும், ஜிம்மி நீஷம் 45 ரன்களையும் எடுத்தனர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட், ஆரோன் ஃபின்ச், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் - ஜோஷ் பிலிப்பே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின்னர் 45 ரன்களில் பிலிப்பே ஆட்டமிழக்க, மறுமுனையில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அரைசதம் கடந்தார்.
பின் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேனியல் சம்ஸ் - ஸ்டாய்னிஸ் இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழலில் நியூசிலாந்தின் ஜிம்மி நீஷம், வீசிய முதல் பந்திலேயே டேனியல் சம்ஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
பின்னர் கடைசி ஓவரின் 2,3ஆவது பந்துகளை எதிர்கொண்ட ஸ்டய்னிஸ் ரன் எடுக்க தடுமாறியதால் ஆட்டத்தின் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பின், நான்காவது பந்தில் ஸ்டாய்னிஸ் சிக்சர் அடித்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை மேலும் உயர்த்தினார்.
அதன்பின் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்த ஸ்டாய்னிஸ், சௌதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதுடன் நியூசிலாந்து அணியின் வெற்றியும் உறுதியானது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியையும் பெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய மார்டின் கப்தில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!