இலங்கை அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்த பின், இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் மீது இப்போதே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர் குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், "நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடுவது என்பது சவாலான விஷயம். கடந்த முறை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆனால் இம்முறை மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுடன் செல்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பந்து பெரிய அளவில் ஸ்விங்காகவில்லை. இந்தியாவிலிருந்து வெளியில் சென்று வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதல்ல. 2014ஆம் ஆண்டின்போது நியூசிலாந்து சென்ற இந்திய அணியில் நான் இருந்தேன். அதனால் நிச்சயம் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து ஆடிய போட்டிகளை கூர்ந்து கவனித்தேன். அதில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அனைத்து அணிகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு, அதனை செயல்படுத்துவதில் குளறுபடிகள் நடக்கும். ஆனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் என்ன திட்டங்கள் தீட்டப்பட்டதோ, அதனைச் சரியாகச் செயல்படுத்தினர்.