ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்ததால், நாளைய போட்டியில் நிச்சயம் ஆறுதல் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் இருவரும் காய்ச்சல் காரணமாக இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக பயிற்சியிலிருந்து வெளியேறினர். இந்நிலையில், நாளைய போட்டியில் இருவரில் ஒருவர் உடற்தகுதியில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மாற்றுவீரராக கிளென் ஃபிலிப்ஸை களமிறக்க நியூசிலாந்து அணி முடிவு செய்துள்ளது.
இதனால், நியூசிலாந்திலிருந்து கிளென் ஃபிலிப்ஸ் சிட்னி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கெரி ஸ்டெட் பேசுகையில், ‘ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் இருவரும் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க அனைத்து வாய்ப்பையும் வழங்குவோம். ஒருவேளை இருவரில் ஒருவர் உடற்தகுதி பெறவில்லை என்றால், கிளென் ஃபிலிப்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்படும். நடப்பு சீசனில் அவர் சிறப்பான ஃபார்மில் உள்ளார். எந்த வரிசையில் களமிறக்கினாலும் அவர் நன்கு பேட்டிங் செய்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் விளையாடிவருகிறார்" எனத் தெரிவித்தார்.
ஆக்லாந்து ஏசஸ் அணிக்காக விளையாடிவரும் ஃபிலிப்ஸ் இதுவரை 23 முதல்தர போட்டிகளில் பேட்டிங்கில் நான்கு சதம் உட்பட 1,489 ரன்களும் பவுலிங்கில் 15 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் குறைக்கப்படுவதை வெறுக்கிறேன்: கிளென் மெக்ராத்!