உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் மீது எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். அதற்கேற்றவாறு கிவிகளிடமிருந்து வரும் வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவர். நியூசிலாந்து அணி வீரர்களான பிளம்மிங், மெக்கல்லம், வில்லியம்சன் ஆகியோருக்கு இடையில் சைலண்ட்டாக ஜாம்பவான் வீரராக வளர்ந்த வீரர் ராஸ் டெய்லர்.
சமீபத்தில் டி20, டெஸ்ட், ஒருநாள் என கிரிக்கெட்டின் அனைத்துவிதமான ஃபார்மட்டிலும் 100 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெற்றுள்ளார். 14 வருடங்களாக தொடர்ந்து நியூசிலாந்து அணிக்காகச் சிறப்பாகப் பங்காற்றிவரும் ராஸ் டெய்லருக்கு, இந்த ஆண்டுக்கான சிறந்த நியூசிலாந்து கிரிக்கெட்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது பற்றி அவர் பேசுகையில், ''இந்த 14 வருடங்கள் நிறைய ஏற்ற, இறக்கங்களுடன்தான் பயணித்துள்ளேன். உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி, பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கிடைத்த ஆதரவு என இந்த வருடம் மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் நான் களமிறங்கும்போது ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற தீவிரம்தான் என்னை சிறப்பாகச் செயல்படவைக்கிறது. அந்தத் தீவிரம் இருந்தால், வயது என்பது வெறும் எண்தான்'' என்றார்.