ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 467 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 114 ரன்களும் ஸ்மித் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்களை எடுத்திருந்தது. லாதம் 9 ரன்னுடனும் ராஸ் டெய்லர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனிடையே இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், டாம் லாதம் மட்டும் பொறுப்புடன் ஆடி 144 பந்துகளில் 50 ரன்கள் (நான்கு பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 148 ரன்களுக்கே முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் 5, ஜேம்ஸ் பேட்டின்சன் 3, மிட்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 319 ரன்கள் பின்தங்கியிருந்த நியூசிலாந்து அணிக்கு பாலோ-ஆன் தராமல் ஆஸ்திரேலிய அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 38 ரன்கள், மார்னஸ் லபுஸ்சாக்னே 19 ரன்கள், ஜோ பர்ன்ஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் ஏழு ரன்னில் வெளியேறினார். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. இருப்பினும், அந்த அணி 456 ரன்களுடன் வலுவான முன்னிலையில் உள்ளது.