தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்தை பழி தீர்த்த நியூசி...!

வெலிங்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

New Zealand Beat England by 21 Runs

By

Published : Nov 3, 2019, 5:07 PM IST

நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

சாம் கரண் - பில்லிங்ஸ்

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கப்தில், கிராண்ட்ஹோம், நீஷம் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பாக ஜோர்டன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 177 என்ற சற்று கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது.

வின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியைக் கொண்டாடிய நியூசி. வீரர்கள்

அந்த அணியின் பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமலும், மூன்றாவதாக களமிறங்கிய வின்ஸ் ஒரு ரன்னிலும் வெளியேற மூன்று ரன்களுக்கு இரண்டு முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மோர்கன் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து துரதிருஷ்டவசமாக அவரும் பெவிலியன் திரும்பினார்.

ஹாட்ரிக் சிக்சர் அடித்த ஜோர்டன்

பின்னர் இங்கிலாந்து அணி சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. சிறிது நேரம் களத்திலிருந்த ஜோர்டன், இஷ் சோதியின் 13ஆவது ஓவரில் 4, 6, 6, 6 என பறக்கவிட ஆட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சாண்ட்னர் ஜோர்டனின் விக்கெட்டை வீழ்த்தி அவரை பெவிலியனுக்கு அனுப்பி பரபரப்பை குறைத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, நியூசிலாந்து அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆட்டநாயகன் விருதை வென்ற சாண்ட்னர்

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மாலன் 39 ரன்களும், ஜோர்டன் 36 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பாக சாண்ட்னர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

இதையும் படிங்க: 'அப்செட்' என்பதைவிட, வங்கதேசத்தால் அனைவரையும் எளிதாக வெல்ல முடியும்: ரோஹித் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details