இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளும் முதலில் டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது.
மீண்டும்வந்த வில்லியம்சன்
இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது டி20 தொடரில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து வீரர்களின் பெயரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டுள்ள கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் ஹமீஷ் பென்னட் நீண்ட இடைவேளைக்குப்பின் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப்பின் தற்போதே நியூசிலாந்து அணியில் விளையாடுகிறார். எனினும் உள்ளூர் டி20 போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.