இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருக்கும் எம்.எஸ்.கே பிரசாத், அவரது சக குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரது பதவிக்காலம் முடிவடைந்தது. பொதுவாக, தேர்வுக்குழுத் தலைவர், குழு உறுப்பினர் உட்பட ஐவர் அடங்கிய தேர்வுக்குழுதான் இந்திய அணியை தேர்வுசெய்யும்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், சேதன் சர்மா, வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, அஜித் அகர்கர், ராஜேஷ் செளகன் உள்ளிட்ட ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதிலிருந்து தேர்வுக்குழுத் தலைவர், குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்காக இருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இவர்களை தேர்ந்தெக்கும் பொறுப்பு பிசிசிஐயால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் முன்னாள் இந்திய வீரர்களான மதன் லால், ஆர்.பி. சிங், வீராங்கனை சுலக்ஷ்னா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், புதிய தேர்வாளர்கள் எப்போது தேர்வுசெய்யப்படுவர் என்பது குறித்து மதன் லால் கூறுகையில்,
"இந்திய அணியின் தேர்வுக்குழு பதவிக்காக மொத்தம் 44 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். அதிலிருந்து இருவர் மட்டுமே தேர்வுக்குழுத் தலைவர், குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பதவிக்கா, பல சிறந்த வீரர்களும் விண்ணப்பத்துள்ளனர். ஆனால், இதற்கு யார் சரியான நபரோ அவர்களை தேர்வு செய்வதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நிச்சயம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின், புதிய தேர்வுக்குழுத் தலைவர், குழு உறுப்பினர் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என்றார். மேலும், விண்ணப்பம் அனுப்பிய 44 வீரர்களிலிருந்து நேர்காணலுக்கு யார் யார் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் என்பது இன்னும் முடிவாகவில்லை எனவும் அவர் கூறினார்.
தேர்வுக்குழு பதவிக்கு விண்ணப்பித்த அஜித் அகர்கர், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், சேதன் சர்மா பெரும்பாலும், இந்த பதவிக்கு லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், நயன் மோங்கியா, அஜித் அகர்கர் ஆகியோர்களில் இருவர் தேர்வாகலாம் என கூறப்படுகிறது. இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 21 முதல் மார்ச் 4ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி வெலிங்டனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 29ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியா விதைத்த வினையெல்லாம்... வங்கதேச வீரர் கூறும் பதில்!