அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் மே 25ஆம் தேதி ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. உலகின் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் இருக்கும், "ஐபிஎல் தொடரில் நானும், திசாரா பெரேராவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது, சிலர் எங்களை நோக்கி ’கலு’ என அழைத்தனர்.
அப்போது அதற்கான அர்த்தம் கறுப்பினத்தைச் சேர்ந்த வலுவான நபர் என நினைத்திருந்தேன். ஆனால் அவை கறுப்பினத்தவரைக் கிண்டல்செய்து கூறப்பட்ட சொல் என்பது தற்போது தெரிந்துகொண்டு மிகவும் வேதனையடைந்தேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திரத் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சரியானவற்றை செய்ய நேரம் இன்னும் கடந்துபோகவில்லை. நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் அனுபவித்த விஷயம் பற்றி பேசுவதில் எந்தத் தவறும் இல்லை' என்று பதிவிட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இனவெறிக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.