கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இம்மாத இறுதிவரை 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், கோவிட் -19 வைரசால் கொல்கத்தாவில் இப்படி ஒரு நிலை வரும் என தான் கனவிலும் நினைத்ததில்லை என பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சொந்த ஊரை இப்படி பார்ப்பேன் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். கூடிய விரைவில் இந்த நிலைமை மாறும்" என குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, கொல்கத்தா சாலையின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.