பிரிஸ்பேனில் தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4ஆவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. இதனால் இன்று (ஜன.19) நடைபெற்று வரும் கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு எனப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான நடராஜன், முதல் இன்னிங்ஸில் 6 நோ-பால்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 நோபால்களை வீசினார். அதிலும் ஐந்து முறை அவர் வீசிய ஓவரின் முதல் பந்து நோ-பாலாக அமைந்தது. இதை கவனித்த இப்போட்டியின் வர்ணனையாளர் ஷேன் வார்னே, நடராஜன் வீசிய நோ-பால்கள் சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வார்னே கூறுகையில், “நடராஜன் பந்து வீசும்போது என் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது. நடராஜன் 8 நோ-பால்களை வீசியுள்ளார். அனைத்து நோ-பால்களுமே மிகப்பெரியவை. அதில் 5 நோ-பால்கள் ஓவரின் முதல் பந்திலேயே வீசப்பட்டுள்ளது. நாமெல்லாம் நோ-பால் வீசியிருக்கிறோம். ஆனால், ஓவரின் முதல் பந்திலேயே 5 நோ-பால்கள் வீசியதுதான் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய முதல் போட்டியில் நடராஜன் நோ-பால்களை வீசியது இயல்பான ஒன்று தான். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே இதனை ஸ்பாட் பிக்ஸிங் போன்று சித்தரிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் கொதித்தெழுந்த ரசிகர்கள், "மார்க் வாக், ஸ்டீவ் வாக் ஆகியோருடன் விளையாடும்போது, ஸ்பாட் பிக்சிங் புகார்களை நீங்கள் சந்திக்கவில்லையா. இலங்கையில் சிங்கர் கோப்பை நடந்தபோது, புக்கிகளுக்கு ஆடுகளத்தின் தன்மை, காலநிலை போன்ற தகவல்களை வழங்கி மார்க் வாக்கும் நீங்களும் சிக்கவில்லையா. அப்போது உங்கள் மீது எழுந்த புகாருக்கு இதுவரை நீங்கள் ஏன் விளக்கம் அளிக்காமல் உள்ளீர்கள் என்றனர்.
மேலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு தடை பிறப்பிக்கப்பட்டபோது, உங்கள் நாட்டு வீரர்களின் ஒழுக்கத்தைப் பற்றி நீங்கள் வாய் திறக்காதது ஏன்?. ஆனால், ஓராண்டுக்குப் பின் ஸ்மித்தை அணியில் சேர்க்க மட்டும் நீங்கள் பரிந்துரை செய்தீர்கள். இதற்கு அர்த்தம் என்ன?" என்று வார்னேவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: IND vs AUS: ஆஸி.யை திணறடித்த சிராஜ், தாக்கூர் கூட்டணி; இந்தியாவுக்கு 328 ரன்கள் இலக்கு!