நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற குரூப் ஏ-க்கான போட்டியில் பரோடா - கோவா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோவா அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பராடோ அணிக்காக விளையாடிய இந்திய வீரர் யூசஃப் பதான் பேட்டிங்கில் டக் அவுட்டாகி இருந்தாலும், தான் ஃபீல்டிங்கில் கில்லி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். கோவா அணியின் வெற்றிக்கு கடைசி எட்டு பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்டன.
பராடோ பந்துவீச்சாளர் ரிஷி அரோத் வீசிய பந்தை, கோவா வீரர் தர்ஷன் கவர் திசையில் அடித்தார். அப்போது ஷார்ட் கவர் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த யூசஃப் பதான், சூப்பர்மேன் போல பந்தை வலது கையில் பறந்து பிடித்து அசத்தினார்.
யூசஃப் பதானின் இந்த ஃபீல்டிங் திறன் வீடியோவை அவரது சகோதரர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'இது பறவையா இல்லை. இந்த கேட்சை பிடித்தது யூசஃப் பதான். சூப்பர் கேட்சைப் பிடித்துள்ளார். தொடருக்கு முன், உனது கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் இந்த கேட்ச்' என பதிவிட்டிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 2007 முதல் 2011 வரை பதான் சகோதரர்களான இர்பான் பதான் - யூசஃப் பதான் ஆகியோர் தங்களுக்கான தனி இடத்தை பிடித்திருந்தனர். அதன்பின் ஃபார்ம் அவுட், காயம் காரணமாக இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. இந்திய அணிக்காக 57 ஒருநாள், 22 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய யூசஃப் பதான் பேட்டிங்கில் இதுவரை இரண்டு சதம், மூன்று அரை சதம் என 1046 ரன்கள் எடுத்துள்ளார். பவுலிங்கில் மொத்தம் 46 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க:டி.கே.வின் மரணமாஸ் கேட்ச்! - ஷாக்கான ரசிகர்கள்