ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாடவுள்ளது. இதில் விளையாட ஏற்கனவே பத்து அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டதால் எஞ்சியுள்ள அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 14 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பங்கேற்றுள்ளன. இதில் இரு குரூப் பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக உலகக்கோப்பைக்கு தகுதி பெறும். தொடர்ந்து இரண்டு, மூன்று, நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பிளே-ஆஃப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு நடைபெறும். அதனையொட்டி பப்புவா நியூ கினியா அணி ஏ பிரிவிலும், அயர்லாந்து அணி பி பிரிவிலும் முதலிடம் பிடித்து நேரடியாக தகுதி பெற்றன.
அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் பிளே-ஆஃப் போட்டியில் நெதர்லாந்து - ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஹ்மது ராஸா 22 ரன்கள் எடுத்தார்.
நெதர்லாந்து பந்துவீச்சில் பிராண்டன் க்ளோவர் நான்கு, பால் வேன் மீக்கிரென், டிம் வேன் டெர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 15.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 81 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பென் கூப்பர் அதிகபட்சமாக 41 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி மூன்றாவது அணியாக உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்றது. முன்னதாக கடந்த 2009, 2015 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.