இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய, தீர்மானித்து விளையாடி வருகிறது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தங்கராசு, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 300ஆவது வீரராக அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
இதன் மூலம் ஒரு அணிக்கெதிரான தொடரின் ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணி சார்பாக அறிமுகமான முதல் வீரர் எனும் வரலாற்றுச் சாதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு படைத்துள்ளார்.
'சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்' நடராஜன் தங்கராசு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரின் வலைப்பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்ட நடராஜன் தங்கராசு, வீரர்களின் அடுத்தடுத்த காயங்கள் காரணமாகவும், தனது அபார பந்துவீச்சுத் திறனாலும் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.
அதன்பின் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து காயங்கள் காரணமாக விலகினர்.
இதனால் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த நடராஜன் தங்கராசுக்கு இன்றைய போட்டியில் விளையாடும் லெவன் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் : ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது கோவா எஃப்சி!