பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ராவில்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்றைய இரண்டாம் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 143 ரன்களுடனும், சஃபிக் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து, மூன்றாம் ஆட்டநாள் இன்று தொடங்கியவுடனே பாபர் அசாம் 143 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணி தரப்பில் அபு ஜாவித், ருபேல் ஹொசைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 82.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியில் முகமது மிதுன் 63, நஜ்முல் ஹொசன் 44, லிதான் தாஸ் 33, ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன்ஷா அப்ரிடி நான்கு, முகமது அபாஸ், ஹரிஸ் சோஹைல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 215 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும் வங்கதேச அணி மீண்டும் சொதப்பாலான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் இளம் பந்துவீச்சாளரான நசீம் ஷா 41ஆவது ஓவரின் கடைசி மூன்று பந்தில் நஜ்முல் ஹொசைன், தைஜூல் இஸ்லாம், மஹமதுல்லாஹ் ஆகியோரை அவுட் செய்து ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்.