இலங்கை கிரிக்கெட் அணியின் ஆஸ்தான ஸ்பின்னராக விளங்கியவர் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனைப் படைத்துள்ளார். இலங்கையின் கண்டியில் பிறந்த இவர் தமிழராவார்.
இருப்பினும் இவர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சாவிற்கு ஆரம்பம் முதலே ஆதரவாக இருந்துவருகிறார். கோத்தபய ராஜபக்ச, 2005 முதல் 2015 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தபோது தான் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடத்தப்பட்டது. ஆனால் இதுபோன்று போர் குற்றங்கள் நடக்கவில்லை என முரளிதரன் தொடர்ந்து தெரிவித்தார்.
இது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு முத்தையா முரளிதரனை கவர்னராக நியமிக்கவுள்ளதாக தற்போது புதிய செய்தி ஒன்று கசிந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இருப்பினும் இதற்கு தமிழர்கள் மத்தியில் தற்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அவர் அதிபராக பதவியேற்ற நிலையில் நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை இடைக்கால பிரதமராக நியமித்து புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டார். இது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக இருந்துவரும் நிலையில் மற்றுமொரு செய்தியாக முத்தையா முரளிதரனின் கவர்னர் பதவியும் அதில் இணைந்துள்ளது.