இந்திய அணியின் சேட்டைக்காரப் பையன் யாரென்று கேட்டால், ரசிகர்கள் அனைவரும் கூறும் ஒரே பெயர் சாஹல் தான். கெயிலுக்கு பேட்டிங் கற்றுக்கொடுப்பது, ரோஹித் சர்மாவுடன் சிக்சர் அடிக்க போட்டியிடுவது என சாஹலின் சேட்டைகளுக்கு அளவே இல்லை.
இவரின் சேட்டைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே, ‘சாஹல் டிவி’ என்ற ஒன்றை பிசிசிஐ அங்கீகரித்துள்ளது. இதில், வீரர்களுடன் சாஹல் செய்யும் வேடிக்கைகள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி பேருந்தில் பயணம் செய்தது. அந்தப் பேருந்தில் சாஹல் எடுத்த வீடியோ ஒன்றை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
அதில் ராகுல், குல்தீப் யாதவ், பும்ரா, ரிஷப் பந்த் என பல்வேறு வீரர்களிடம் பேசியபடி பேருந்தின் கடைசி சீட்டிற்கு செல்லும் சாஹல், சின்ன ஞாபகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.