தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிரிக்கெட்டில் இதை எல்லோரும் கண்டிப்பா பார்த்திருப்போம்... தோனியின் ஃப்ளாஷ்பேக்! - இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இளமைக்கால கிரிக்கெட்டை நினைவுபடுத்தியுள்ளார்.

dhoni

By

Published : Sep 24, 2019, 10:22 PM IST

இந்திய கிரிக்கெட்டின் ஒரு புதிய அத்தியாயத்தின் வரலாறு இதே நாளில் தோனி என்னும் கூறிய ஆளுமையால் பொறிக்கப்பட்டது. எதை கூறுகிறேன் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்நேரம் புரிந்திருக்கும். கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பெற்ற வெற்றிதான் அந்த வரலாறு.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதிலும் கேப்டனாக பொறுப்பு வகித்த முதல் தொடரிலேயே கோப்பையுடன் நாடு திரும்பிய தோனி என்னும் மகத்தான வீரர் அதன்பின் புரிந்த சாதனைகள் நாம் அறிந்ததே.

ஒருவர் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் அவரின் முதல் சாதனை அவருக்கு மட்டுமல்ல அவரை பின்தொடரும் அனைவருக்கும் சிறப்புதான். அந்த வகையில் இந்திய அணி டி20 கோப்பையை கைப்பற்றிய இந்த நாளை ஐசிசி, பிசிசிஐ மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடிவருகின்றனர்.

2007இல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி

இந்த சூழலில் இந்த சாதனைக்கு தலைமை வகித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிலர் இரவு நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அதில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் நபர் இரண்டு முறை ஸ்டெம்பில் பந்து பட்டு ஆட்டமிழக்கிறார்.

முதல் பந்தில் ஆட்டமிழக்கும் அந்த நபர், தான் பந்தை கவனிக்கவில்லை என கூறி வெளியேற மறுக்கிறார். பின்னர் அந்த பந்து டெட் பாலாக அறிவிக்கப்பட்டு இரண்டாவது முறை அவர் பேட்டிங் செய்கிறார். அந்த பந்திலும் அந்த நபர் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்.

இந்த வீடியோவை பதிவிட்ட தோனி, இந்த வீடியோ பள்ளிப் பருவத்தை நினைவு கூர்கிறது. இந்த வீடியோவில் இருக்கும் அந்த நபர் இந்த வீடியோ பதிவு மட்டும் இல்லையென்றால் இந்த நிகழ்வு நடந்ததை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். கிரிக்கெட்டில் இது போன்ற ஒரு தருணத்தை நாம் அனைவரும் நிச்சயம் கடந்து வந்திருப்போம் என குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக தெருவில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் இதுபோன்று ஒரு நிகழ்வை கட்டாயம் கடந்து வந்திருக்கக்கூடும். அந்த நிகழ்வை தற்போது தோனி நினைவு படுத்தியிருப்பது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details