அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
இதில் 181 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு புஜாரா 15 ரன்களில் ஆட்டமிழந்து, ஆரம்பத்திலேயே அதிர்ச்சிகொடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய விராட்கோலி ரன் ஏதுமின்றி ஸ்டோக்ஸிடம் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த ரஹானேவும் 27 ரன்களில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார்.
இதையடுத்து ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறது. இதன்மூலம் இரண்டாம் நாள் தேனீர் இடைவேளையின்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 36 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: முதல் அரையிறுதியில் மோதும் மும்பை - கோவா!