இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி உள்நாட்டு, வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் அளித்தனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான டாம் மூடி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். அதே போன்று நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், இந்தியாவின் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் போன்றவர்களும் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தவிர ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருந்தார்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பங்கள் குறித்த புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று பிசிசிஐயின் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் அனுஷ்மான் கேக்வாட் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளது. இந்திய அணி வீரர்களுடன் சென்றுள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவின் பணிக்காலம் தற்காலிகமாக 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய பயிற்சியாளர் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின்போது இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.