வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதற்காக இந்திய வீரர்களான அனுமா விஹாரி, பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரை ரசிகர்களும் சக வீரர்களும் பாராட்டிவருகின்றனர்.
குறிப்பாக, இப்போட்டியில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்ததுதான் பலருக்கு தெரிந்துள்ளது. ஆனால், இந்திய வீரரான முகமது ஷமியும் இப்போட்டியில் ஒரு சாதனையை படைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாமலிருக்கிறது. ஷமி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பியதால் அவர் பேட்டிங் செய்தாரா? என்பது விராட் கோலிக்கே நியாபகம் இருக்காது.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் இஷாந்த் ஷர்மா 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஒன்பாதவது விக்கெட்டுக்கு முகமது ஷமி களமிறங்கி இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். இதன்மூலம், முகமது ஷமி தொடர்ந்து ஆறு இன்னிங்ஸிலும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். அதில், இரண்டு முறை நாட் அவுட் தவிர, மற்ற நான்கு முறையும் அவர் டக் அவுட்தான் ஆகியுள்ளார். அதுவும் எட்டு பந்துகள்தான் அவரால் தாக்குப்பிடிக்க முடிந்தது.
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து டக் அவுட்டான இந்திய வீரர் அஜித் அகர்காரின் சாதனையை (5) முறியடித்துள்ளார். மேலும், மற்றொரு இந்திய வீரரான பகவத் சந்திரேசகருடன் முதலிடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட்டுக்கு பெயர் பொனவர் அஜித் அகர்கர். அவர், ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தொடர்ந்து ஏழு இன்னிங்ஸில் டக் அவுட் ஆனது வேறு கதை. அத்தொடரிலிருந்து அவருக்கு ’பாம்பே டக்’ என்று பெயர் கிடைத்தது. தற்போது அந்த வரிசையில் முகமது ஷமியும் ’டெல்லி டக்’ என்ற பெயரை பெற்றுள்ளார்.