இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித், ராகுல், ஷ்ரேயாஸ், பந்த் உள்ளிட்டோரின் அதிரடியால் 387 ரன்களை எட்டியது.
இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் ஹோப் - பூரான் இணையின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டும் எழுச்சி கண்டது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் குல்தீப் ஹாட்ரிக்கும், முகமது சமி மூன்று, ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, 2019ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை அச்சுறுத்திய பூரான் விக்கெட்டை சமி கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டை முதல் பந்திலேயே டக்-அவுட்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனையையும் ஏற்படுத்தினார்.