நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அதில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி மீண்டும் ஒயிட் வாஷ் வாங்கி தாயகம் திரும்பவுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்தமாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் 102 ரன்களும், புஜாரா 100 ரன்களும், ப்ரித்வி ஷா 98 ரன்களும், ரஹானே 91 ரன்களும், விஹாரி 86 ரன்களும் எடுத்துள்ளனர்.
இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது இந்திய கேப்டன் விராட் கோலி மொத்தமாக 38 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவரைக் காட்டிலும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 6 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை என ரசிகர்களால் குறை கூறப்பட்ட புஜாரா இந்தத் தொடரில் இந்திய வீரர்களிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேனாக உள்ளார். கிட்டதட்ட 351 பந்துகளை எதிர்கொண்டு 517 நிமிடங்கள் களத்தில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:எட்டு ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா!