தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தற்கால வாசிம் அக்ரமை மிஸ் செய்தது டெஸ்ட் கிரிக்கெட் - Wasim Akram

2016இல் அதே லார்ட்ஸ் மைதானத்தில் கம்பேக் தந்து தடைகளை வென்று சரித்திரம் படைத்தார் ஆமிர்.

முகமது ஆமிர்

By

Published : Jul 26, 2019, 10:24 PM IST

கிரிக்கெட்டில் இந்திய அணி சிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கி வந்தபோது, பாகிஸ்தான் அணி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கிவந்தது.

இங்கே சுனில் கவாஸ்கர், சச்சின், டிராவிட், கங்குலி, கோலி என்றால் அங்கே வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக் வரிசையில் இடம்பிடித்தவர் முகமது ஆமிர். இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், தனது 27ஆவது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவதாக அறிவித்துள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2009இல் உள்ளூர் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தி, கிரிக்கெட்டின் அடுத்த வாசிம் அக்ரம் என்ற பெயரை பெற்றார் ஆமிர். வாசிம் அக்ரமிற்கு பிறகு பாகிஸ்தான் அணியில் நம்பிக்கைக்குரிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாரும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. 2009 டி20 உலகக்கோப்பை தொடர் மூலம் இவர் கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். பொதுவாக, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு வீரர் அறிமுகமானால் அவர் மீது எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம்தான். அதுவும் அடுத்த வாசிம் அக்ரம் என்று பெயர் எடுத்தவர் மீது இருந்த எதிர்பார்ப்பை சொல்லவா வேண்டும்?

விக்கெட் எடுத்த மிகழ்ச்சியில் முகமது ஆமிர்

தனது மிரட்டலான பந்துவீச்சின் மூலம், பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல ஆமிர் முக்கிய காரணமாக திகழ்ந்தார். டி20க்கு பிறகு அவர், இலங்கை அணிக்கு எதிரான தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். டி20, ஒருநாள் போட்டியில் யார் வேண்டுமானாலும் சிறப்பாக ஆடலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அப்படி இல்லை. ஆட்டத்தின் சூழ்நிலை, மைதானத்தின் தன்மை ஆகியவற்றில் ஒரு வீரர் எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் என்பதை வைத்துதான் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பது தெரியவரும்.

அந்த வகையில், தனது முதல் போட்டியிலேயே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், முகமது ஆமிர். ஆனால், அதன் பின் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இவரது பந்துவீச்சில் விக்கெட்டை கொடுக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது இலங்கை அணி. அதனால், இவர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் எகனாமிக்கல் பவுலராக இருந்தார்.

பின்னர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அடுத்தடுத்த வெளிநாடு தொடர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆமிரின் செலிபிரேஷன்
மேற்கூறிய நாடுகளில் தட்ப வெப்ப நிலை பல்வேறு விதமாக இருந்தாலும், இவரது பந்துவீச்சின் வெப்பம் மட்டும் குறையவே இல்லை. இளம் வீரரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் தவித்தனர். ”18 வயதில் எனக்கு இருந்த திறமையைவிடவும் முகமது ஆமிருக்கு அதிகமாக உள்ளது” ஜாம்பவான் வாசிம் அக்ரம் அவரை உச்சிமுகர்ந்தார்.
குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிராக 2010இல் நடந்த டெஸ்ட் தொடர் மூலம், உலகமே இவரை அடுத்த வாசிம் அக்ரம் என அழைத்தது. முதலிரண்டு போட்டிகளைவிடவும், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இவரது பந்துவீச்சை கண்டு கிரிக்கெட்டின் தாய் நிலமான இங்கிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவரது லைன் அன்ட் லெங்க்தை எதிர்கொள்ளமுடியாமல் இங்கிலாந்து வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இதனால், பாகிஸ்தான் அணி 14 வருடங்களுப் பிறகு மீண்டும் ஓவல் மைதானத்தில் வெற்றிபெற்றது.
முகமது ஆமிர்

இதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆமிர், லார்ட்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற கௌரவமான பெயர் பலகையில் இடம்பிடித்தார். அதன் மூலம், இளம் வயதில் 50 விக்கெட்டுகளை வேகமாக எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அதேசமயத்தில், நோபால் பந்தை வீசி மேட்ச் ஃபிக்ஸிங்கில் இவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால், ஐசிசி இவருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது.

நோபால் சர்ச்சை

பின்னர், 2016இல் அதே லார்ட்ஸ் மைதானத்தில் கம்பேக் தந்து தடைகளை வென்று சரித்திரம் படைத்தார் ஆமிர். இருப்பினும் அவரது முதல் இன்னிங்ஸின் வேகம் இரண்டாவது இன்னிங்ஸில் கொஞ்சம் மிஸ் ஆனது. அவரால் பழையபடி பந்துவீச முடியவில்லையா இல்லை அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பேட்ஸ்மேன்கள் கண்டுகொண்டார்களா என்று தெரியவில்லை.

2010க்கு பிறகு, 22 போட்டிகளில் விளையாடிய அவர் 68 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். ஆனால், டி20, ஒருநாள் போட்டிகளில் இவரது பந்துவீச்சு திறமை குறையவே இல்லை. குறிப்பாக உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் இவர்தான்.

தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ள நிலையில், இவரது ஓய்வு நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அரங்கில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது பெருமையாக உள்ளதாகவும், இனி ஒருநாள், டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக இளம் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு வந்தாலும், முகமது ஆமிர் போன்று மிரட்டல் பந்துவீச்சை வெளிப்படுத்துவார்களா என்பது நிச்சயம் சந்தேகம்தான். ஏனெனில், ஆமிர் பதித்த தடயங்கள் அப்படி.

ஆமிரின் கம்பேக்

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, தற்போது உலகமே பார்த்து அஞ்சும் பேட்ஸ்மேன்களில் ஒருவரான வார்னர் ஆமிர் குறித்து கூறிய வார்த்தைகள் இவை: ”முகமது ஆமிர் டெஸ்ட் போட்டிக்கான லைன் அன்ட் லெங்க்த்தை உலகக்கோப்பையில் வீசினார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள கடினமாக இருந்தது”. டெஸ்ட்டில் அனல் பறந்த ஆமிரின் பந்துவீச்சை இனி ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் மட்டுமே காண முடியும்.

கிரிக்கெட்டின் மற்றொரு வாசிம் அக்ரமாக உள்நுழைந்த ஆமிரின் இந்த திடீர் முடிவு டெஸ்ட் உலகில் மிகப்பெரிய இடியாக இறங்கியிருக்கிறது.







ABOUT THE AUTHOR

...view details