பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மிஸ்பா உல் ஹக். இவரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அணி தேர்வாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்திருந்தது.
இந்நிலையில் லாகூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மிஸ்பா உல் ஹக், பயிற்சியாளர் பொறுப்பில் அதிக ஈடுபாடு காட்டவுள்ளதால், தேர்வு குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா கூறுகையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒரே நபர் இரு பதவிகளில் வகிக்கக் கூடாது என்ற காரணத்தினால் நான், பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் பதவிலிருந்து விலகுகிறேன். அதேசமயம் அணியின் தலைமை பயிற்சியாளராக ஈடுபாடு காட்டவுள்ளதால், இரு பதவிகளில் என்னால் நீடிக்க இயலாது. மேலும் ஜிம்பாப்வே அணிகெதிரான தொடருக்கு பின் நவம்பர் 30ஆம் தேதி நான் இந்த பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய தேர்வுக்குழு தலைவர் டிச.1ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வார். அதுவரை மிஸ்பா உல் ஹக் தேர்வுக்குழு தலைவர் பதவியில் நீடிப்பார். அதேபோல் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியை மிஸ்பா தேர்வு செய்வார்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:விக்கெட் கீப்பிங்கில் சதமடித்த காம்ரன் அக்மல்!