இந்திய மகளிர், தென்ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் பிரியா புனியா, ஸ்மிருதி மந்தானா ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த பூனம் ராவத், மிதாலி ராஜ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இப்போட்டியில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 26 ரன்களை எட்டியபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். மேலும், சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.
முன்னதாக, கடந்த போட்டியில் மிதாலி ராஜ், மூன்று வகையிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும், உலகளவில் 2ஆவது வீராங்கனை எனும் சிறப்பையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவாவில் காதலியைக் கரம்பிடிக்கவிருக்கும் பும்ரா!