ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் கலைகட்டியுள்ளது. இதில் இன்று (அக்.25) நடைபெற்ற 45 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிது.
ஸ்டோக்ஸின் அதிரடி சதத்தால் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி ஆகியோர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும், ஹர்திக் பாண்டியா 60 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அந்த அணியின் உத்தபா 13 ரன்களிலும், ஸ்மித் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் - சாம்சன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
மறுமுனையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனும் அரைசதமடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
இதனால் 18.2 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, தனது த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.