பிசிசிஐயின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, இன்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டார்.
அங்கு கங்குலியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று மதியம் 1 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 70 ஆகவும், ரத்த அழுத்தம் 130/80 ஆகவும், பிற மருத்துவ அளவுகளும் சாதாரண நிலையிலேயே இருந்தன. தற்போது அவருக்கு முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை சீராகவுள்ளது. கங்குலியின் உடல்நிலை குறித்த அடுத்த அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி