மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டரிலுள்ள, ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77, மிட்செல் மார்ஷ் 73 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பிலிருந்து ஆர்சர், மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஜோனி பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ராய், ரூட், கேப்டன் மோர்கன், பட்லர் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழநதனர்.
இதைத்தொடர்ந்து ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், பேர்ஸ்டோவோடு இணைந்து நல்ல பார்னர்ஷிப்பை அமைத்தார்.
84 ரன்கள் எடுத்தபோது சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா பந்தில் பேர்ஸ்டோ தனது விக்கெட்டை பறிகொடுக்க, பவுண்டரி, சிக்சர்கள் அடித்து சிறப்பாக விளையாடிவந்த பில்லிங்ஸ் சதமடித்தார்.
கடைசிவரை போராடிய பில்லிங்ஸ் 118 ரன்கள் எடுத்த நிலையில் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளிவில் கைகொடுக்காத நிலையில், 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் மட்டும் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் துல்லியமான பந்துவீச்சால் திணறடித்த ஹசல்வுட்டுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
3 மெய்டன்களுடன் சிறப்பாக பந்து வீசிய ஹசல்வுட்டுக்கு ஆட்ட நாயகன் விருது
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா தற்போது 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (செப். 13) நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் மோர்கன், கம்மின்ஸ் - உறுதி செய்த கேகேஆர்!