பொதுவாக, கிரிக்கெட்டில் சகோதரர்கள் வேறு வேறு அணிகளில் விளையாடினால் அந்தப் போட்டி அனல் பறக்கும். அதுவும் இரட்டையர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம், போட்டியின் சுவாரஸ்யமும் அவர்களுக்குள் இருக்கும் போட்டியும் கூடும். இதில், ஒருவரது பந்துவீச்சில் மற்றொருவர் அவுட்டானால் போதும், கண்டிப்பாக அந்த இடத்தில் ரிவெஞ்ச் இருக்கும்.
அந்த வகையில், இங்கிலாந்தை சேர்ந்த மாட் பர்கின்சன் - கேலம் பர்கின்சன் என்ற இரட்டையர்கள் இருவரும் ஒருவர் ஒருவரது பந்துவீச்சில் மாறி மாறி அவுட்டாகியுள்ளனர். இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், லாங்காஷைர் (Lancashire) - லீஸ்செஸ்டெர்ஷைர் (Leicestershire ) அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுவருகிறது.
அதில், மாட் பர்கின்சன் லாங்காஷைர் அணிக்காகவும், கேலம் பர்கின்சன் லீஸ்செஸ்டெர்ஷைர் அணிக்காவும் விளையாடிவருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த லீஸ்செஸ்டெர்ஷைர் அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 29 ரன்கள் எடுத்திருந்த கேலம் பர்கின்சன், தனது சகோதரர் மாட் பர்கின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மாட் பர்கின்சன் விக்கெட்டை கைப்பற்றிய கேலம் பர்கின்சன்
இதையடுத்து, கேலம் பர்கின்சனின் விக்கெட்டை கைப்பற்றியதை அவரது சகோதரர் மேத்யூவ் பர்கின்சன் தனது ட்விட்டர் பக்த்தில் ’சாரி கேலம் பர்கின்சன்’ என பதிவிட்டார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய லாங்காஷைர் அணி 170 ரன்களுக்கு சுருண்டது. கர்மா இஸ் ஏ பூமராங் என்பதை போல மாட் பர்கின்சன், கேலம் பர்கின்சனின் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
இதில், ஆச்சரியம் என்னவென்றால் இரண்டுபேரும் மாறி மாறி எல்.பி.ட.பள்யூ முறையில்தான் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து மண்ணில் 37 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு இரட்டையர்கள் அவுட்டாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தங்களை ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அவுட் செய்துகொண்டு, ட்விட்டரில் கலாய்த்துகொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இப்போட்டியில், வெற்றிபெறபோவது மேத்யூவ் பர்கின்சன் அணியா அல்லது கேலம் பர்கின்சன் அணியா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
இதனிடையே, நியூசிலாந்துக்கு எதிரான டி20, டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாட் பர்கின்சன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.