இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தாக்கத்திலிருந்து இந்திய ரசிகர்களும் நியூசிலாந்து வீரர்களும் இன்னும் மீளவில்லை. அரையிறுதிப் போட்டியில் தோனியை ரன் அவுட் செய்ததால்தான் அதன் கர்மாவாக மார்டின் கப்தில் இறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனார் என்ற கட்டுக்கதைகளும் பேசப்பட்டுவருகின்றன.
2019 உலகக்கோப்பைத் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த கப்தில், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரில் ஏன் களமிறங்கப்பட்டார்? என்று புலம்பாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். நியூசிலாந்து அணியில் மெக்கல்லமிற்கு அடுத்தபடியாக ஸ்ட்ரைட் திசையில் சிக்சர் அடிக்கும் ஒரே வீரர் கப்தில்தான். இதனால்தான் என்னமோ கப்தில் சூப்பர் ஓவரில் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
2019 உலகக்கோப்பைத் தொடரின் வில்லன் கப்தில்தான் என அவரை விமர்சிக்கும் ரசிகர்கள் கொஞ்சம் நான்கு ஆண்டுகளுக்கு முன் 2015 உலகக்கோப்பைத் தொடரில் அவரது ஆட்டத்தைப் வாய் பிளந்துதான் பார்ப்பார்கள். ஏனெனில் 2015 உலகக்கோப்பைத் தொடரின் நாயகனே கப்தில்தான். அந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் 547 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
1992-க்குப் பிறகு 2015இல்தான் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றது. 2015 மார்ச் 21இல் வெலிங்டனில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இரண்டுமுறை முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் தொடக்க வீரராகக் களமிறங்கிய கப்தில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதகளப்படுத்தினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்ட அவரை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் சமாளிக்க முடியாமல்போனது.
இதனால், 35ஆவது ஓவரில் கப்தில் சதம் விளாசினார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் பேக்-டூ-பேக் இரண்டாவது சதம் இதுவாகும். இதன்மூலம், உலகக்கோப்பைத் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்த நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் 41ஆவது ஓவரில் 150 ரன்களைக் கடந்தபோது அவரது பேட்டிங், அடுத்த கியருக்குச் சென்றது. குறிப்பாக, ஜெரோம் டெய்லர் வீசிய 45ஆவது ஓவரில் அவர் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என 27 ரன்களைச் சேர்த்தார்.