தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#INDvSA: கோபத்தில் கையை உடைத்ததால் மூன்றாவது டெஸ்ட் வாய்ப்பை இழந்த வீரர்

கோபத்தில் கையை உடைத்துக்கொண்ட தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

Markram

By

Published : Oct 17, 2019, 8:39 PM IST

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது.

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் என இரண்டு துறையிலும் அசத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. அதிலும் கடைசியாக புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 137 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கில் தவிடுபொடியாகினர்.

அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் எடுக்காமால் ஆட்டமிழந்ததால் விரக்கியடைந்த மார்க்ரம், வீரர்கள் உடை மாற்றும் அறைக்குச் (டிரஸ்ஸிங் ரூம்) சென்று ஒரு பலமான பொருள் மீது ஓங்கி குத்தியுள்ளார். அதன்பின் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர் நாளை மறுநாள் ராஞ்சியில் தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இன்னும் மாற்று வீரர்கள் அறிவிக்கப்படவில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னதாக லெக் ஸ்பின்னர் கேஷவ் மஹாராஜ் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்க்கரமும் காயத்தால் வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிது. நடப்பு டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்ஸில் ஆடிய மார்க்ரம் 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பேசிய எய்டன் மார்க்ரம், இதற்கு தான் முழு பொறுப்பையும் எற்றுக்கொள்கிறேன். அணியை இந்த நிலைமையில் விட்டுச்செல்வது வருந்தமளிக்கிறது. நான் இதிலிருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். எனது தவறுக்காக அணி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். விரைவில் அணிக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details