தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'தேவைப்பட்டால் டிவில்லியர்ஸை அழைத்து வருவேன்' - தென் ஆப்பிரிக்க புதிய பயிற்சியாளர் பவுச்சர்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ், மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர்.

de villiers, mark boucher
de villiers, mark boucher

By

Published : Dec 15, 2019, 2:07 PM IST

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்க அணியின் புதிய இயக்குநராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர், தொடர் தோல்விகளைச் சந்திக்கும் தென் ஆப்பிரிக்காவை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சரை புதிய பயிற்சியாளராக நியமித்தார். அவர் 2023ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க் பவுச்சர், பிரபல இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டிவில்லியர்ஸ் குறித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்குச் செல்லும் போது சிறந்த வீரர்களை தேர்வு செய்தால், யாரைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பவுச்சர், ' அணியை பலப்படுத்துவதே என் வேலை. எனவே அதற்கான தேவை ஏற்பட்டால் டிவில்லியர்ஸ் போன்ற பல வீரர்களிடம் பேசுவேன். மேலும் அவர்களின் ஓய்வு முடிவை திரும்பப் பெற வைக்க முயற்சிப்பேன். உலகக் கோப்பைக்கு சிறந்த அணி செல்ல வேண்டும் என்ற பட்சத்தில் அதை அணி வீரர்கள், ஊடகங்கள் முன்னிலையில் நிச்சயம் சரி செய்வேன்' என்றார்.

உலகின் தலைசிறந்த அணியாக வலம் வந்த தென் ஆப்பிரிக்க அணி, ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் அணியில் இடம்பெறாமால் போனதும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அவர் தலைமையில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வரை முன்னேறியது.

டிவில்லியர்ஸ்

அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் கடினமான சூழ்நிலைகளிலும் அதிவேகமாக ரன் குவிக்கக் கூடியவர். ஆனால், 2018ஆம் ஆண்டு அவர் வேலைப் பளு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதன் பின் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் அவர் கலக்கி வருகிறார். தற்போது நடைபெற்றுவரும் மான்ஸி சூப்பர் லீக் தொடரில் ஷ்வான் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள டிவில்லியர்ஸ் சிறப்பாகவே விளையாடி வருகிறார். மார்க் பவுச்சர் பயிற்சியாளராக இருக்கும் அந்த அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பவுச்சர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தால் டிவில்லியர்ஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால் அந்த அணி மீண்டும் பலம் வாய்ந்ததாக மாறும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் நட்சத்திரங்கள்

ABOUT THE AUTHOR

...view details