2019ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் 34ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து மெல்போர்ன் அணியில் தொடக்கவீரர்களாக ஸ்டோய்னிஸ், ஹில்டன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 60 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து ஹில்டன் அரைசதமடித்து அசத்த அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
சிறப்பாக விளையாடி வந்த ஹில்டன் 59 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிவந்த ஸ்டோய்னிஸ் 79 பந்துகளில் எட்டு சிக்சர்கள், 13 பவுண்டரிகளுடன் 147 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ரன்களை சேர்தது. இந்தப் போட்டியில் ஸ்டோய்னிஸ் 147 ரன்கள் குவித்ததன் மூலமாக பிபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்து அசத்தினார்.