இந்தியா ஏ - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட அதிகார்வபூர்வமற்ற கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.மனிஷ் பாண்டே தலைமையிலான இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி அன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் கேப்டன் மனிஷ் பாண்டே சதம் விளாசி ஆட்டமிழந்தார். அவருடன் துணையாக நின்ற இளம் வீரர் ஷுப்மன் கில் 77 ரன்களில் வெளியேறியதால், இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, 296 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியினர், குருணல் பாண்டியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், அந்த அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இப்போட்டியில் இந்திய அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் குருணல் பாண்டியா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இப்போட்டியில் சதம் விளாசிய மனிஷ் பாண்டே ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது அதிகார்வபூர்வ மற்ற ஒருநாள் போட்டி நாளை மறுநாள் அன்டிகுவாவில் நடைபெறவுள்ளது.