நடப்புச் சீசனுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் இரண்டு ஜாம்பவான் அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - செல்சி மோதின.
செல்சி அணியின் சொந்த மைதானமான ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தாக்குதல் (அட்டாக்கிங்) ஆட்டத்தில் ஈடுபட்டன.
ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் முன்கள வீரர் அந்தோணி மார்ஷியல், ஹெட்டர் முறையில் கோலடித்து அசத்தியதால் முதல்பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதி தொடங்கியவுடனே செல்சி வீரர் குர்ட் சவுமா கோல் அடித்தார். ஆனால், காணொலி உதவி நடுவர் முறையில் பார்த்தபோது அவர் ஆஃப் சைடில் இருந்ததால் அந்த கோல் ரத்துசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டன் ஹாரி மேக்யூரி கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் செல்சி அணி ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது.
இறுதியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செல்சியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது.
இதன்மூலம், மான்செஸ்டர் யுனைடெட் அணி புள்ளிப்பட்டியலில் விளையாடிய 26 போட்டிகளில் 10 வெற்றி, எட்டு டிரா, எட்டு தோல்வி என 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
மறுமுனையில், செல்சி அணி 26 ஆட்டங்களில் 12 வெற்றி, ஐந்து டிரா, ஒன்பது தோல்வி என 41 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க:சரித்திரத்தில் முதல்முறையாக கால்பந்தாட்ட வீரர் கையில் லாரஸ் விருது!