இந்தியாவின் முதல் தர உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசம் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின், முகுந்த், விஜய் சங்கர் என நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தமிழ்நாடு அணி களமிறங்கியது.
இதில் டாஸை வென்ற மத்திய பிரதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கங்கா ஸ்ரீதர் - கேப்டன் பாபா அப்ரஜித் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் ஸ்ரீதர் 43 ரன்களில் வெளியேற, அவருக்கு அடுத்துவந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் பொறுப்புடன் ஆடிய பாபா அப்ரஜித் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்களை விளாசினார். இதனால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது.மத்திய பிரதேச பந்துவீச்சில் ஈஸ்வர் பாண்டே அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேச அணி ரமீஸ் கான், வெங்கடேஷ் ஐயர், ஹிர்வானி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 333 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 88 ரன்களை சேர்த்தார். தமிழ்நாடு அணி சார்பில் நடராஜன் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.