ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 11ஆவது லீக் ஆட்டத்தில் கிறிஸ் லின் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணி, மொயீன் அலி தலைமையிலான டீம் அபுதாபி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற டீம் அபுதாபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அரேபியன்ஸ் அணியில் கேப்டன் கிறிஸ் லின் தனது ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் எதிரணியின் பந்துவீச்சை பதம்பார்த்தார். இதன்மூலம் 18 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்த அவர் டி10 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தை கடந்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
அரைசதமடித்த மகிழ்ச்சியில் கிறிஸ் லின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த லின் 30 பந்துகளில் 9 பவுண்டரிகள், 7 சிக்சர்களை விளாசி 91 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் டி10 கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதன்மூலம் மராத்தா அரேபியன்ஸ் அணி பத்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்தது. பின் இலக்கை நோக்கி களமிறங்கிய டீம் அபுதாபி அணியில் கேப்டன் மொயீன் அலி, லுக் ரைட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அந்த அணியால் 10 ஓவர்களில் 114 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் மராத்தா அரேபியன்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் டீம் அபுதாபி அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச்செய்த கிறிஸ் லின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்:
- மராத்தா அணியின் கேப்டன் கிறிஸ் லின் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் டி10 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
- இந்தப் போட்டியில் கிறிஸ் லின் 82 ரன்களை எடுத்திருந்தபோது டி10 கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
- இதில் மராத்தா அரேபியன்ஸ் அணி 138 ரன்களை எடுத்ததன் மூலம் டி10 போட்டிகளில் அதிகபட்ச ரன்களை அடித்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அணியிலிருந்து முரளி விஜய் விலகல்!