தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒரேநாளில் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் தந்த இரண்டு ஃபைனல்கள் - ரசிகர்கள்

திரில்லிங் பட ட்விஸ்ட்களை மிஞ்சிய விம்பிள்டன், கிரிக்கெட் உலகக் கோப்பை ஃபைனல்கள் குறித்த தொகுப்பு!

ஒரேநாளில் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் தந்த இரண்டு ஃபைனல்கள்

By

Published : Jul 16, 2019, 9:22 AM IST

விம்பிள்டன், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் என இந்த இரண்டு தொடரின் இறுதிப் போட்டிகளும் ஒரேநாளில் (ஜூலை 14) நடைபெற்றது. விளையாட்டு ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக அமைந்ததைவிட பிரெசர், பிபி எகிறியதுதான் அதிகம்.நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வென்றிடாத இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின.

உலகக் கோப்பை ஃபைனல்

அதேசமயம், கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ஃபைனல் போட்டியும் லண்டனில் நடைபெற்றது. இதில், நட்சத்திர வீரர்களான சுவிட்சர்லாந்தின் ஃபெடரர், செர்பியாவின் ஜோகோவிச் மோதினர்.இந்த இரண்டு போட்டிகளும் ஒரேநாளில் நடைபெற்றதால், விளையாட்டு ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடர், டென்னிஸ் போட்டிக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது.

வில்லியம்சன்

இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 241 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியின் ஆட்டம் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து அணி சேஸிங்கைத் தொடங்கியபோது, விம்பிள்டன் போட்டியும் தொடங்கியது. இந்த இரண்டு போட்டியும் இவ்வளவு திரில்லிங் மொமண்ட்டை தரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

விம்பிள்டன் ஃபைனல்

நான்-லீனியர் திரைப்படத்தின் ஸ்க்ரீன் ப்ளேவை விட விம்பிள்டன், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களின் ஸ்க்ரீன் ப்ளேவில் ஏகப்பட்ட ட்விட்ஸ்டுகள் நிறைந்திருந்தன. விம்பிள்டனில், முதல் செட்டையும் மூன்றாவது செட்டையும் டை பிரேக்கர் முறையில் கைப்பற்றினார் ஜோகோவிச். அதேசமயத்தில், கிராஸ் கோர்ட் கிங் என்றழைக்கப்படும் ஃபெடரர் இரண்டாவது , நான்காவது செட்டை எளிதாக வென்றார். இதனால், இரண்டு வீரர்களும் தலா இரண்டு செட்டுகளில் வெற்றி பெற்றதால் , ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிப்பதாக கடைசி செட் இருந்தது.

நான்காவது செட் வென்ற மகிழ்ச்சியில் ஃபெடரர்

அதேபோல், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியின் முடிவும் இரண்டு பக்கம் மாறிக் கொண்டே இருந்தது. இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் 'டை'யில் முடிந்தது. முன்பே தெரிவித்ததை போல, படத்தில் வரும் க்ளைமாக்சைக் கூட கெஸ் செய்துவிடலாம் ஆனால் இந்த இரண்டு போட்டிகளின் க்ளைமாக்ஸ் கெஸ் செய்யவே முடியவில்லை. உலகக் கோப்பை சாம்பியன் யார் என்பதை முடிவு செய்ய இறுதிப் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஸ்டோக்ஸ்

சரி, விம்பிள்டனில் என்ன நடந்தது என்று பார்த்தால், ஐந்தாவது செட்டில் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதால் இரு வீரர்களும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தால் கிரிக்கெட்டை விட டென்னிஸ் ரசிகர்கள் மிகவும் பிரஷருக்கு உள்ளாகினர். இதனால், கடைசி செட் 12-12 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதேபோல் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் அடித்ததால் 'டை'யில் முடிந்தது.

கப்தில்

இறுதிப் போட்டி டை, சூப்பர் ஓவரும் டை என்பதால் இரண்டு அணிகளுமே சாம்பியன்கள்தான். ஆனால், பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் வென்று நீண்ட நாள் கனவை நனவாக்கியது.

உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து

இதனிடையே, விம்பிள்டனில் வேறு வழியில்லாமல் சாம்பியன் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆட்டம் டை பிரேக்கருக்கு மீண்டும் சென்றது. முன்னதாகவே, டை பிரேக்கரில் செட்டை வென்றது போலவே, ஐந்தாவது செட்டிலும் ஜோகோவிச் வெற்றிபெற்று, விம்பிள்டன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று அசத்தினார். இந்தப் போட்டி நான்கு மணி நேரம் 58 நிமிடங்களுக்கு நீடித்தது. அதிலும், கடைசி செட் மட்டும் 100 நிமிடங்களுக்கும் மேல் நடைபெற்று, விம்பிள்டன் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்தது.

விம்பிள்டன் கோப்பையை வென்ற ஜோகோவிச்

டென்னிஸ், கிரிக்கெட் என விளையாட்டுகள் வேறுபாட்டாலும், அதன் முடிவுகள் ஒரே நாளில் இப்படி இழுபறிக்குச் சென்றதுதான் விளையாட்டின் அதிசயத்திலும் அதிசயம். இந்த அதிசயம் நிகழ்ந்த ஜூலை 14ஆம் தேதியை வரலாறு பின்நாட்களில் நிச்சயம் நினைவு கூறும். கூடவே, ஐசிசியின் விதிமுறைகள் குறித்த கேள்வியும் சர்ச்சையும் நிச்சயம் எழும். மதர் ஆஃப் கோயின்சிடன்ஸ் போல, இரண்டு தொடரின் இறுதிப் போட்டிகளின் முடிவும் கடைசி நொடி வரை பரபரப்புக்கு இட்டுச் சென்றதால், இன்னும் ரசிகர்கள் இதில் இருந்து மீண்டு வரமுடியாமல் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details