கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ரசிகர்களின்றி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து பந்துவீச்சாளர் லூக்கி பெர்குசன் தனக்கு தொண்டையில் வலியிருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு ஹோட்டலில் தனியறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதனால் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பாரா என்ற கண்ணோட்டத்தில் அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.
அந்தப் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, கொரனோ வைரஸ் அச்சத்தால் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பெர்குசனுக்கு கொரோனா இல்லையென்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் நியூசிலாந்து வீரர்களுடன் அவர்களது நாட்டிற்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைராஸால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரேநாள் மட்டும் ஆஸ்திரேலியாவில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவில் இதுவரை 248 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கொரோனா எதிரொலி - ஐபிஎல் வேண்டாம்... பிசிசிஐ-க்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!