கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருந்தாலும், தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கெரி சோபர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், இங்கிலாந்தின் ரோஸ் ஒயிட்லி, ஆப்கானிஸ்தானின் ஹஸரதுல்லாஹ் சஸாய் ஆகியோர் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் ஏழாவது வீரராக இடம்பிடித்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த லியோ கார்டர்.
இந்தியாவுக்கு ஐபிஎல் டி20 போல், நியூசிலாந்துக்கு சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடர். இதில், கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தால் நார்தன் நைட்ஸ் - கென்டர்பரி அணிகள் மோதின. இதில், 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கென்டர்பரி அணியின் இடதுகை பேட்ஸ்மேன் லியோ கார்டர் ஆட்டத்தின் தேவ்சிச் வீசிய 16ஆவது ஓவரில் ஃபைன் லெக், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் என ஆறு பந்துகளிலும் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்கள் அடித்து அமர்களப்படுத்தினார்.
இதன் மூலம், கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் யுவராஜ் சிங், ரோஸ் ஒயிட்லி, ஹஸரதுல்லாஹ் சஸாய் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.