'சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்' நேற்று முன்தினம் (மார்ச் 5) முதல் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூரில் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி, திலகரத்னே தில்சன் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்கள் பெர்கின்ஸ், டியோனரின் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பிரையன் லாரா, டுவைன் ஸ்மித் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் டுவைன் ஸ்மித் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய லாரா அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிரையன் லாரா 53 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.