காரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதற்கான இந்திய வீரர்கள் இம்மாத இறுதியில் சிறப்பு விமானங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கருண் நாயருக்கு சென்ற மாதம் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டிருந்தார். பின் ஆகாஸ்ட் 8ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.
இருப்பினும் பிசிசிஐயின் வழிகாட்டுதலின் படி, கருண் நாயர் மேலும் மூன்று கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிசிசிஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் படி:
- விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள், அணி நிர்வாகத்தினர்கள் அனைவரும் உயிர் பாதுகாப்பு சூழ்நிலையில்( bio-secure environment) மட்டுமே இருக்க வேண்டும்.
- தொடர் முழுவதும் அனைத்து வீரர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவர் குழு நியமிக்கப்படுவார்.
- ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஒவ்வொரு வீரரின் மருத்துவ மற்றும் பயண வரலாற்றை மருத்துவ குழு பெற வேண்டும்.
- ஒவ்வொரு அணியின் வீரர்களும், ஊழியர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒருங்கிணைந்த ஐந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- தொடரின் ஓவ்வொரு ஐந்து நாட்களும் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- அதேசமயம் இந்த முறை தொடரின் போது வீரர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டால், அவர்களுக்கான மாற்று வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ள அனைத்து அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:2 ஆண்டு தடை ஓவர்... கம்பேக் கொடுக்கவுள்ள ஷாகிப் - ரசிகர்கள் மகிழ்ச்சி!