இது தொடர்பாக இணையத்தில் நடந்த நேர்காணலில் அனில் கும்ப்ளே கூறியதாவது:
கிரிக்கெட்டில் இயல்பாக நடக்கும் விஷயங்களில் ஒன்றான எச்சில் தொட்டு பந்தை பலப்படுத்துவது, பாலிஷ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வீரராக இருந்து பார்க்கையில் அது கடினமானதுதான். இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலானது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஒருநாள், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை பந்தை பாலிஷ் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படியே தேவைப்பட்டாலும் வியர்வைத் துளியை வைத்து சமாளித்து விடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவ்வாறு செய்ய இயலாது. எனவே புற்களோடு அல்லது கடினமாக தளத்துடன் பிட்ச்சை தயார் செய்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் இரண்டு ஸ்பின்னர்களை களமிறக்கி விளையாடலாம்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆடுகளங்களில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடுவது சாத்தியம் இல்லாமல் இருந்த நிலையில், பிட்ச்சை பேட்டிங், பவுங்லிங் என இரண்டுக்கும் உகந்தவாறு மாற்றியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அதன்மூலம் ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக்கலாம் என்றார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக அனில் கும்ப்ளே தலைமையில் ஐசிசி குழுவினர், மீண்டும் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கும் நாடுகள் பாதுகாப்பு முறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். கைகளை கழுவுதல், எச்சிலை பந்து மீது பயன்படுத்தாமல் இருத்தல், கண், மூக்கு, வாய் போன்ற உடல் உறுப்புகளை பந்துடன் தொடர்புபடுத்தாமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து பந்தை பயன்படுத்துவதில் பவுலர்களுக்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில், பிட்சை பந்துவீச்சுக்கும், பேட்டிங்குக்கும் உகந்தவாறு தயார் செய்துகொண்டால் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த முடியும் என்று கிரிக்கெட் வீரராக அனில் கும்பளே குறிப்பிட்டுள்ளார்.