இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியைப் போல இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச தீர்மானித்தது. ஏற்கனவே, சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அதனைக் கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 159, கே.எல். ராகுல் 103, ஸ்ரேயாஸ் ஐயர் 53, ரிஷப் பந்த் 39 ரன்களை அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்ப்பட்ட கேப்டன் கோலி டக் அவுட்டானார்.
இதைத்தொடர்ந்து, 388 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரான் ஆகியோரது பேட்டிங் இந்திய அணிக்கும் ரசிகர்களும் பயத்தை ஏற்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த போது ஜோடி சேர்ந்த இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இதற்கு முக்கிய காரணம்.
அதுவும் நிக்கோலஸ் பூரான் அதிரடி ஆட்டத்திலும், ஹோப் பொறுப்பான ஆட்டத்திலும் ஈடுபட்டு அணியின் ஸ்கோரை உயர்த்திவந்தனர். நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தைப் பார்க்கும்போது முதல் ஒருநாள் போட்டியில் ஹெட்மயரின் ஆட்டம்தான் நினைவுக்கு வந்தது. அந்த அளவிற்கு அதிரடியான ஆட்டத்தையே அவர் கடைபிடித்தார். இந்த ஜோடி 13.2 ஓவர்களில் 106 ரன்கள் சேர்த்த நிலையில், நிக்கோலஸ் பூரான் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஆறு பவுண்டரிகள், ஆறு சிக்சர்களை விளாசினார்.
விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் முகமது ஷமி
அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் பொல்லார்ட் ரிஷப் பந்திடம் கேட்ச் தந்து டக் அவுட்டானார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 29.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் தனிஒருவராக பொறுப்புடன் விளையாடி வந்த ஹோப் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்று, பவுண்டரி லைனில் கோலியிடம் பிடிப்பட்டு 78 ரன்களில் வெளியேறினார்.
பொறுப்பான ஆட்டத்தைக் கடைபிடித்த ஹோப்
அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையிலும், அல்சாரி ஜோசப் கேதர் ஜாதவிடம் கேட்ச் தந்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் தனது இரண்டாவது ஹாட்ரிக்கை பதிவு செய்தார். முன்னதாக, 2017இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்த குல்தீப் யாதவ்
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இந்திய அணி இப்போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளதால் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி டிசம்பர் 22ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறவுள்ளது.
இதனிடையே இப்போட்டியில் ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த நிலையில் தீபக் சாஹரின் பந்துவீச்சில் தந்த கேட்சை ஸ்லிப் திசையிலிருந்த கே.எல். ராகுல் தவறவிட்டார். அதேபோல, பூரான் 22 ரன்கள் எடுத்தபோது ஜடேஜா பந்துவீச்சில் தந்த கேட்சை லாங் ஆஃப் திசையிலிருந்த தீபக் சாஹர் நழுவவிட்டார். இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் அசத்தினாலும் ஃபீல்டிங்கில் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதையும் படிங்க:முதலில் ஸ்மித், மார்க் பவுச்சர். இப்போ காலிஸ்...! தென் ஆப்பிரிக்க அணியில் ஒன்றுசேர்ந்த மும்மூர்த்திகள்!