ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. இப்போட்டியில், 341 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய ஆட்டத்தின் 38ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி 18 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 98 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
இப்போட்டியில் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். ஹர்பஜன் சிங் இச்சாதனை படைக்க 76 போட்டிகளை எடுத்துகொண்ட நிலையில், குல்தீப் யாதவ் இதனை தனது 58ஆவது போட்டியிலேயே எட்டினார்.