தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் இந்தியர்... ஹாட்ரிக்கில் சாதனைப் படைத்த 'சைனாமேன்' குல்தீப் யாதவ்! - ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர்கள் விவரம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியதன் மூலம், ஒருநாள் போட்டியில் இரண்டுமுறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

Kuldeep Yadav
Kuldeep Yadav

By

Published : Dec 18, 2019, 11:25 PM IST

கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பது ஒவ்வொரு பந்துவீச்சாளர்களின் கனவாக இருக்கும். அதிலும், ஒருநாள் போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர்களையெல்லாம் விரல்விட்டு எண்ணும் அளவில் மட்டுமே உள்ளனர். இலங்கையின் மலிங்கா சமிந்தா வாஸ், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் என ஐந்து பேர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

அதில், மலிங்கா ஒருநாள் போட்டியில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருப்பது வேறுகதை. தற்போது இவர்களது வரிசையில் சைனாமேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இணைந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குல்தீப் யாதவ்

இதில், ஆட்டத்தின் 33ஆவது ஓவரின் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பந்தில் ஷாய் ஹோப், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசஃப் ஆகியோர் வரிசையாக அவுட்டானதால், குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறை ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ், சக வீரர்கள்

முன்னதாக, 2017இல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் தனது ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார் என்பது நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய ஆறாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார்.

இதனிடையே, இப்போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமிக்கு அமைந்த இந்த வாய்ப்பை நழுவவிட்டார். 30ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் நிக்கோலஸ் பூரானையும், அதற்கு அடுத்த பந்தில் பொல்லார்டையும் அவுட் செய்த அவர், அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜேசன் ஹோல்டரை அவுட் செய்ய தவறினார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள்:

  1. சேதன் சர்மா vs நியூசிலாந்து, 1987, நாக்பூர்
  2. கபில்தேவ் vs இலங்கை, 1991, கொல்கத்தா
  3. குல்தீப் யாதவ் vs ஆஸ்திரேலியா, 2017, கொல்கத்தா
  4. முகமது ஷமி vs ஆப்கானிஸ்தான், 2019, சவுத்ஹாம்டன்
  5. குல்தீப் யதாவ் vs வெஸ்ட் இண்டீஸ், 2019, விசாகப்பட்டினம்

இதையும் படிங்க:உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை படைத்தது இந்தியர்தான்!

ABOUT THE AUTHOR

...view details