கிரிக்கெட்டின் கடவுளாகக் கொண்டாடப்படும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இன்று பேட்டிங்கில் களமிறங்கினார். ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு நிதி நிவாரணம் திரட்டும் விதமாக இன்று மெல்போர்னில் புஷ்ஃபையர் பாஷ் போட்டி நடைபெற்றது. இதனிடையே, சச்சின் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லீஸ் பெர்ரியின் வேண்டுகோளை ஏற்று, அவர் இன்று ஒரு ஓவர் பேட்டிங் செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
1989 முதல் 2013 வரை 22 யார்ட்ஸுக்குள் 24 ஆண்டுகளில் தனது சிறப்பான பேட்டிங்கால் இந்திய ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத தருணங்களைத் தந்தவர் சச்சின். இந்நிலையில், விளையாட்டுத் துறையின் மிகவும் உயரிய விருதான லாரஸ் விருதின் 20 ஆண்டுகளில் சிறந்த தருணத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட இறுதிப் பட்டியலில் சச்சினின் பெயர் இடம்பெற்றுள்ளது.
2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களது கனவு மட்டுமின்றி சச்சினின் கனவும் நனவானது. இதனால், கோலி, யூசஃப் பதான், ரெய்னா உள்ளிட்ட சக இந்திய வீரர்கள் தங்களது தோளில் சச்சினை சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். சச்சினுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்த இந்த தருணத்திற்காகதான் அவரது பெயர் லாரஸ் விருதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மொனாகோவைச் சேர்ந்த லாரஸ் அறக்கட்டளை 2000ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையில் இந்த விருதுகளை வழங்குகிறது.