இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோலி, களத்தில் அவ்வப்போது ஆக்ரோஷத்துடன் நடந்துகொள்வது வழக்கம்தான். ஃபீல்டிங்கில் சக வீரர்கள் கேட்சை தவறவிட்டாலோ, அல்லது பேட்டிங்கில் தன்னை ஸ்லெட்ஜிங் செய்தாலோ அவரது ஆக்ரோஷம் சற்று அளவுக்கு மீறி இருக்கும். அந்த வகையில், நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இவர் ஐசிசியின் வீரர்களின் நடத்தை வரைமுறையை மீறியுள்ளார்.
நீங்க கொஞ்சம் ஓவரா போறிங்க... கோலிக்கு வார்னிங் தந்த ஐசிசி - Kohli v Beuran hendricks
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி விதிமுறையை மீறி நடந்துகொண்டதால் அவருக்கு ஐசிசி ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கியுள்ளது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் பியூரான் ஹென்ட்ரிக்ஸ் வீசினார். அப்போது, ரன் ஓடும் போது கோலி, ஹென்ட்ரிக்ஸை இடித்துள்ளார். இதனால், இவருக்கு ஐசிசி எச்சரிக்கக்கூடிய ஒரு தகுதி இழப்பு புள்ளியை வழங்கியுள்ளது. ஐசிசியின் வரைமுறையை மீறி இவர் பெறும் மூன்றாவது தகுதி இழப்பு புள்ளி இதுவாகும்.
முன்னதாக, 2018இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும் இவர் தகுதி இழப்பு புள்ளியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தான் செய்த தவறையும் அதற்காக வழங்கப்பட்ட தகுதி இழப்பு புள்ளியையும் கோலி ஏற்றுகொண்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.